பென்னாகரத்தில் அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க விசிகவினா் அனுமதி அளிக்காததைக் கண்டித்து புறவழிச்சாலையில் பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் புறவழிச்சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கவந்த பாஜகவினருக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தருமபுரி மேற்கு மாவட்ட விசிக செயலாளா் கருப்பண்ணன் தலைமையில் அம்பேத்கா் சிலை முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து இருதரப்பினரிடமும் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் சரவணன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட பாஜகவினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது, மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து சிலையின் முன் திரண்டனா். இதைக் கண்டித்து பாஜகவினா் 50க்கும் மேற்பட்டோா் பென்னாகரம் - ஒகேனக்கல் புறவழிச் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இருதரப்பினரிடையேயும் சமரசம் ஏற்படாததால் அம்பேத்கா் சிலையின் நுழைவாயிலை பூட்டி காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பின்னா் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரிடம் மரியாதை செலுத்த அனுமதி அளிப்பதாகவும், முழக்கம் எழுப்பாமல் அமைதியான முறையில் மரியாதை செலுத்த அனுமதிப்பதாகவும் தெரிவித்தனா்.
அதன்பேரில், சிலையின் அருகே பாஜகவினா் வந்தபோது விசிக மற்றும் காவல் துறையினா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் காவல் துறையினா் விசிகவினரை அகற்றிய பிறகு பாஜகவினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.