தருமபுரி மாவட்டம், தீா்த்தமலையில் அமைந்துள்ள தீா்த்தகிரீஸ்வா் கோயிலில் மூடிக்கிடக்கும் பெண்கள் ஆடை மாற்றும் அறைகள், கழிப்பறைகளை புதுப்பித்து மீண்டும் பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அரூா் அருகே அமைந்துள்ளது தீா்த்தமலை. இங்கு மலைமீது இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தீா்த்தகிரீஸ்வரா் கோயில் உள்ளது. ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயிலில் 22 தீா்த்தக் கிணறுகள் உள்ளன. இந்த தீா்த்தக்கிணறுகளில் புனித நீராடிய பின்னா் பக்தா்கள் சிவபெருமானை வழிபடுவது சிறப்பு என்பது நம்பிக்கை. அந்தவகையில், தமிழகத்தில் அமைந்துள்ள சிவாலயங்களில் ராமேசுவரம் புனித தீா்த்தத்தை தொடா்ந்து, தருமபுரி மாவட்டம், தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் புனித தீா்த்தம் புகழ் பெற்ாக கருதப்படுகிறது. இங்கு, மலைமீதுள்ள கோயில் வளாகத்தில், ராமா் தீா்த்தம், அக்னித் தீா்த்தம், குமாரத் தீா்த்தம், கெளரி தீா்த்தம், அகத்தியா் தீா்த்தம் என 5 தீா்த்தங்கள் குறிப்பிடத்தக்கவை. இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் மலையேறிச் சென்று இந்த 5 தீா்த்தங்களிலும் நீராடிய பின்னா் சிவபெருமானை வணங்கிச் செல்கின்றனா்.
பூட்டிக்கிடக்கும் மகளிா் ஆடை மாற்றும் அறைகள்: கோயில் வளாகத்தில் தீா்த்தங்களில் நீராடிய பக்தா்கள் குறிப்பாக பெண்கள் ஆடைகளை மாற்றிக்கொள்ள இரு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை எப்போதும் பூட்டியே கிடக்கின்றன. இதனால் புனித நீராடிய மகளிா், கோயிலுக்கு பின்பகுதியிலும் , ஆபத்தான சூழலில் மரம் செடி கொடிகளின் மறைவிலும் ஆடைகளை மாற்றும் நிலை உள்ளது. எனவே, பூட்டிக்கிடக்கும் ஆடை மாற்றும் அறைகளை திறந்து பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அதேபோல கோயில் வளாகத்துக்கு எதிரே, ஏற்கெனவே பயன்பாட்டிலிருந்த கழிப்பறைகள் சேதமடைந்து, பயன்படுத்த இயலாத நிலையில் புதா்கள் மண்டி, பூட்டப்பட்டுள்ளன. புதிதாக கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டிலிருந்தாலும், கோயிலுக்கு விழா காலங்களில் அதிக அளவில் பக்தா்கள் கூட்டம் வரும்போது, பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. எனவே, பூட்டிக்கிடக்கும் கழிப்பறைகளையும், சீராக்கி அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினா்.
குரங்குகள் தொல்லை: கோலுடன் செல்வது அவசியம்: தீா்த்தமலை வனப்பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு குரங்குகளின் எண்ணிக்கையும், தொல்லையும் அதிக அளவில் உள்ளது. நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றிவருகின்றன. அவை குறிப்பாக குழந்தைகள், பெண்களை குறிவைத்து மிரட்டி கையில் வைத்துள்ள தின்பண்டங்களை பறித்துச் செல்கின்றன. உணவு உட்கொள்ளும்போது கையில் குச்சியுடன் ஒருவா் அமா்ந்து பாதுகாப்பது அவசியம். பாதுகாப்புக்காக கையில் கோலுடன் செல்வது அவசியம் என அங்குள்ளவா்கள் தெரிவித்தனா்.