ஊத்தங்கரையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில், துணை ஆட்சியரின் வாகனத்தை மறித்து மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் ஜமாபந்தி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சிவசங்கரன் தலைமை வகித்தார். விழா முடிந்து கிளம்பும் போது, திடீரென கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (41), பன்னீர் (38) ஆகிய இரண்டு மாற்றுத் திறனாளிகள் ஜமாபந்தி அலுவலரின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து தங்களது நிலத்துக்கு பாதை கேட்டு மனு கொடுத்துள்ளனராம். மேலும், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போதே வருவாய்த் துறையினர் ஒருதலைப்பட்சமாக கூட்டு பட்டாவுக்கு தனி பட்டா வழங்கியதாகவும், எனவே, வருவாய்த் துறையினரின் போக்கைக் கண்டித்தும், மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும் சாலையில் படுத்து வழிமறித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.