தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக தருமபுரி மாவட்ட பள்ளிகளில் காலி இடங்களுக்கு வருகிற ஜூன் 20-ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தருமபுரி ஆட்சியர் கே.விவேகானந்தன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் 25 சத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில், இணையத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த மே மாதம் 31-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் சேர்க்கை நடைபெற்றது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர் சேர்க்கைக்கு வராத காரணத்தால், சில இடங்கள் காலியாக உள்ளன.
இந்தக் காலியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பள்ளிகளில் வருகிற 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு துறை சார்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் சேர்க்கை வழங்கப்படவுள்ளது.
எனவே, ஏற்கெனவே இணைய வழியாக விண்ணப்பித்துச் சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர், சம்மந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று காலியாக உள்ள இடத்தில் சேர்க்கை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.