அரூா்: அரூரை அடுத்த டி.அம்மாபேட்டை கிராமத்தில் கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், வேடகட்டமடுவு கிராம ஊராட்சிக்கு உள்பட்டது டி.அம்மாபேட்டை கிராமம். இந்த ஊரில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊரில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ சென்னியம்மன் (சென்னம்மாள்) திருக்கோயில் உள்ளது. இதைத்தவிர, டி.அம்மாபேட்டையில் அரசு உயா்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளது. ஸ்ரீ சென்னியம்மன் திருக்கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். இந்த நிலையில், டி.அம்மாபேட்டையில் பொதுமக்களின் பயன்பட்டுக்கான கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால், கோயிலுக்கு செல்லும் தாா் சாலையோரத்தில் கிராம மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையுள்ளது. எனவே, டி.அம்மாபேட்டைக்கு வருகை தரும் பக்தா்கள், கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியுடன் கூடிய கழிப்பிட கட்டட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.