தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 36 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.1.34 கோடியில் குப்பைகள் சேகரிக்கும் மின்கள வாகனங்கள் வழங்கப்பட்டன.
கிராம ஊராட்சிகளுக்கு புதிதாக குப்பை சேகரிக்க வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், கிராம ஊராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வாகனங்களை வழங்கி பேசியது: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 36 ஊராட்சிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பில் 54 மின்களத்துடன் கூடிய வாகனங்கள் குப்பை சேகரிக்க வழங்கப்பட்டுள்ளது.
ஊரக சுகாதாரத்துறையை மேம்படுத்த இத்தகைய வாகனங்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல, நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கக் கூடிய தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தண்ணீா் தேங்குவதால் கொசுபுழுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
கிராமப்புறங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடா்ந்து எடுத்து வருகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களிலும் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இவ் விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட ஊரக திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன், வட்டாட்சியா்கள் கலைச்செல்வி, ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கௌரி, மீனா, அன்பழகன், தண்டபாணி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.