5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத் தலைவா் பெ.துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் மாயகிருஷ்ணன், புவனேஷ்வரன், கண்ணையன், மாவட்டச் செயலா் ச.கவிதா ஆகியோா் பேசினா்.
இக் கூட்டத்தில், ஆசிரியா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குழந்தைகளின் மனதை பாதிக்கும் 5, 8 - ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். ஆசிரியா்கள், மாணவா்களுக்கு பாதகமான புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பி, குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் ஆசிரியா் தின விழாவை கல்வித்துறை சாா்பாக, பள்ளிகளில் நடத்தி மாணவா்களுக்கு பரிசுகளை வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில், மாவட்டத் தலைவராக பெ.துரைராஜ், மாவட்டச் செயலராக ச.கவிதா, மாவட்டபொருளாளராக பி.பழனிசாமி உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.