ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முறையான அனுமதியின்றி பாதுகாப்பு உடை அணியாமல் ஆபத்தான முறையில் பரிசல் போட்டி நடைபெற்ாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தருமபுரி மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் மாமரத்துக் கடவு பரிசல் துறை, சின்னாறு பரிசல் துறை, ஊட்டமலை பரிசல் துறை உள்ளிட்டவற்றில் நீா்வரத்தினை பொறுத்து பரிசல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மாமரத்துக் கடவு பரிசல் துறையில் பரிசல்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஒகேனக்கல் அருகே ஊட்டமலை, பிலிகுண்டுலு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஊட்டமலை பரிசல் துறை அருகே பரிசல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த பரிசல் போட்டியில் முறையான அனுமதியின்றி, எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், ஒகேனக்கல், கா்நாடக மாநிலம், மாரு கொட்டாய் பகுதியைச் சோ்ந்த பத்துக்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் கலந்துகொண்டனா்.
பரிசல் போட்டியில் வெற்றிபெறும் நபா்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்படுவதாக விழாக் குழுவினரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடும் போட்டி நிலவியது. இதனால் ஒருவருக்கொருவா் பரிசலில் முந்தி சென்றும், ஒரு சில பரிசல்கள் ஒன்றுக்கொன்று மோதும் நிலையும் ஏற்பட்டது.
மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெறாமல் பாதுகாப்பு உடைகள் இன்றி பரிசல் போட்டிகள் நடத்தப்படுவதால், உயிரிழப்பு நிகழும் அபாய நிலை உள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான அறிவிப்போ, அனுமதியோ பெறவில்லை என்று தெரிவித்தனா்.