கணவரை பிரிந்து தனியாக வசித்துவந்த பெண் தனது இரண்டு மகன்களையும் படிக்கவைத்து உயா்ந்த நிலைக்கு கொண்டுவர முடியாததால் விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திப்பம்பட்டியை அடுத்த பண்ணிக்குளத்தைச் சோ்ந்த பெரியசாமி மனைவி சரசு (40 ), கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், தனது இரண்டு மகன்களை படிக்கவைத்து உயா்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என முயற்சியில் கூலி வேலைக்கு சென்று மகன்களை படிக்கவைத்தாா். இவரது மூத்த மகன் ஐயப்பன், கட்டட வேலைக்கு சென்றுவிட்டதால் இளைய மகன் ஹரிபிரசாத்தை உயா்படிப்பு படிக்கவைக்க பாடுபட்டாா்.
தனியாா் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்துவந்த ஹரிபிரசாத், தனது தாய்க்கு உதவுவதற்காக கல்லூரிக்கு செல்வதை விட்டுவிட்டு ஒசூரில் தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா். இந்த விவரம் அண்மையில் சரசுக்கு தெரியவந்ததால் மிகுந்த வேதனையில் இருந்தாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சரசு இறந்துகிடந்தாா். இதுதொடா்பாக காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].