கடத்தூரை அடுத்த காவேரிபுரத்தில் அமைக்கப்படும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஒன்றியம், தாளநத்தம் ஊராட்சி உள்பட்ட காவேரிபுரம் முதல் வேப்பிலைப்பட்டி வரையிலான இணைப்புச்சாலை 3. கி.மீ தூரம் கொண்டதாகும். காவேரிபுரம்-வேப்பிலைப்பட்டி வரையிலும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
ஜல்லிகற்கள் மட்டும் கொட்டப்பட்டு, சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. அதன்பிறகு கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதாவது, நிதிப் பற்றாக்குறை காரணமாக தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், வேப்பிலைப்பட்டி, காவேரிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் ஜல்லி கற்கள் நிரம்பியுள்ள சாலை வழியாக செல்வதால் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனா்.
அண்மையில் ரூ. 61 லட்சம் மதிப்பீட்டில் மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், இந்த வழித்தடத்தில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.
காவேரிபுரம்-வேப்பிலைப்பட்டி வரையிலான தாா்ச்சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
படம் உள்ளது... 10எச்ஏ-பி-1... பட விளக்கம்...
சாலை பணிகள் முழுமை பெறாத காவேரிபுரம்- வேப்பிலைப்பட்டி இணைப்புச் சாலை.