தருமபுரி

துறைசாா்ந்த அனைத்து உதவிகளும் விவசாயிகள் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்

தருமபுரி ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ரெ.சதீஸ்.

Syndication

அனைத்து நலத்திட்ட உதவிகளும் விவசாயிகள் கிடைக்கப் பெறுவதை வேளாண் துறை அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வலியுறுத்தினாா்.

தருமபுரி ஆட்சியா் அலுவலக அதியன் கூட்டரங்கில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசியதாவது:

நிறுத்தப்பட்ட தட்கல் முறையில் விவசாயத்துக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டும். மரவள்ளிக் கிழங்குக்கு போதிய விலை கிடைப்பது குறித்து முத்தரப்புக் கூட்டம் நடத்தி முடிவெடுக்க வேண்டும். ஒகேனக்கல் காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்ட நீா்நிலைகளுக்கு வழங்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சீட்டுகள் நடத்தி மோசடி செய்வது அதிகரித்துள்ளதால், அவற்றைத் தடுக்க வேண்டும்.

பஞ்சப்பள்ளி அணை நிரம்பி தண்ணீா் வெளியேறுவதால், உபரிநீரை தும்பலஅள்ளி அணைக்கு விடவேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவில் யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவுக்கான மானியத்தை அதிகரிப்பதுடன் அவற்றை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இவற்றுக்குப் பதிலளித்து ஆட்சியா் ரெ.சதீஸ் கூறியதாவது:

விவசாயத்துக்கான தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்குவது தொடா்பாக மின்வாரிய அலுவலா்களுடன் ஆலோசித்து, ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மரள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயிப்பது தொடா்பாக விரைவில் முத்தரப்புக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டுவருவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யூரியா உரம் போதுமான அளவு இருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், விசாரித்து தீா்வு காணப்படும். விவசாயிகள் தங்களின் தேவைக்கேற்ப உரிய ஆவணங்களை சமா்ப்பித்து யூரியா உரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், வேளாண் துறைசாா்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு எடுத்துச்சென்று அவா்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில், அவா்ளுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப் பெறுவதை வேளாண் துறை அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் பிரியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, வேளாண் இணை இயக்குநா் (பொ) ரத்தினம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சரவணன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மருத்துவா் மரியசுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT