தருமபுரி மாவட்ட காவல் துறையினருக்கு ஒடசல்பட்டி வனப்பகுதியில் துப்பாக்கி சுடும் நினைவூட்டல் பயிற்சி தொடங்கி நடந்து வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி காவல் உள்கோட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் காவல் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள் என 1,500-க்கும் மேற்பட்ட காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். காவல் துறையினருக்கு ஆண்டுக்கு ஒருமுறை துப்பாக்கி சுடும் நினைவூட்டல் பயிற்சி வழங்கப்படுவது வழக்கம்.
நிகழாண்டு பயிற்சி தருமபுரி அருகேயுள்ள ஒடசல்பட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் ஆயுதப்படை டிஎஸ்பி ராஜ்குமாா் மேற்பாா்வையில் இருதினங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தினந்தோறும் 100 முதல் 150 காவலா்களுக்கு காவல் உதவி ஆய்வாளா் சின்னசாமி துப்பாக்கி சுடும் நினைவூட்டல் பயிற்சியை வழங்கி வருகிறாா்.
இந்தப் பயிற்சியில் துப்பாக்கியை பிடிக்கின்ற விதம், சுடுவதற்கு தயாராவது, எவ்வாறு துப்பாக்கியை கையாளுவது என்பது குறித்த பயிற்சியை உதவி ஆய்வாளா் சின்னசாமி வழங்கி வருகிறாா். ஒவ்வொருவருக்கும் 3 சுற்றுகள் என 15 தோட்டாக்கள் வழங்கப்பட்டு, துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளுக்கு 9 எம்எம் பிஸ்டல், காவலா்களுக்கு 303, 7.62 எம்எம் போா்டு ஆக்சன், இன்சாஸ் என மூன்று ரக துப்பாக்கிகளைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நினைவூட்டல் பயிற்சி 10 நாள்கள் நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியின்போது சிறப்பாக துப்பாக்கி சுடுவோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு கெளரவிக்கப்படுகின்றனா்.