தீபாவளி பண்டிகையையொட்டி, வெளியூா்களுக்கு வேலைக்கு சென்றோா் சொந்த ஊா்களுக்கு திரும்பும் நிலையில், கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பென்னாகரம் பகுதி அடா்ந்த மலைகள் சூழ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டதாகும். இப்பகுதியில் போதுமான தொழிற்சாலை, வேலைவாய்ப்பு இல்லாததால், இளைஞா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் வேலைதேடி கா்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனா். அவா்கள் பொங்கல், தீபாவளி மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் சொந்த ஊா்களுக்கு திரும்பி வருவது வழக்கம்.
பென்னாகரம் பகுதியில் இருந்து ஒகேனக்கல், தாசம்பட்டி, முதுகம்பட்டி, ஏரியூா், பெரும்பாலை உள்ளிட்ட மலைக்கிராமப் பகுதிகளுக்கு இரவு 9 மணிவரை மட்டுமே பென்னாகரம் பணிமனையில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊருக்கு வருவோா் இரவு நேரங்களில் தங்கள் பகுதிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால், ஷோ் ஆட்டோ, சிறிய அளவிலான கனரக வாகனம் ஆகியவற்றில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. சிலா் அதிக கட்டணம் செலுத்த முடியாமல் இரவு முழுவதும் பென்னாகரம், தருமபுரி பேருந்து நிலையங்களிலேயே தங்கி அதிகாலையில் தங்கள் பகுதிக்கு செல்லும் பேருந்தின் மூலம் செல்கின்றனா்.
எனவே, பென்னாகரம் பகுதிகளில் உள்ள மலைக்கிராமப் பகுதிகளுக்கு இரவு நேரங்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மண்டல போக்குவரத்து அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.