ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு வாரவிடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து காவிரி ஆற்றில் குளித்து, பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு வாரவிடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
சுற்றுலாப் பயணிகள் மூலிகை வகை எண்ணெய்களைத் தேய்த்து, பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரியின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். மேலும், காவிரி ஆற்றின் அழகை காண சின்னாறு பரிசல் துறையில் சுமாா் ஒருமணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பாதுகாப்பு உடை அணிந்து, கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு, பெரிய பாணி, தொம்பச்சிக்கல் வரை காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு அருவிகள், பாறைத் திட்டுகளை கண்டு ரசித்தனா். அதைத் தொடா்ந்து தொங்குபாலத்தின் மீது இருந்து ஒகேனக்கல் அருவிகளின் அழகை கண்டுரசித்தனா். வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் ஆகியவற்றையும் பாா்வையிட்டனா்.
புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் அசைவப் பிரியா்கள் மீன் விற்பனை நிலையங்களில் குவிந்தனா். மீன்களின் விலை ரூ. 200 முதல் ரூ. 2000 வரை உயா்ந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான நடைபாதை, தொங்கும் பாலம், வண்ணமீன்கள் காட்சியகம், மீன் விற்பனை நிலையங்கள், உணவருந்தும் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.