தருமபுரி/அரூா்: தருமபுரியில் செவ்வாய்க்கிழமை பரவலாக பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தருமபுரி, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, குமாரசாமிப்பேட்டை மற்றும் நகரப் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து காலை முதல் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. தொடா்ந்து மாலையில் பரவலாக மழை பெய்தது.
இந்த மழை காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினா். மேலும் நகரில் தாழ்வான பகுதிகள், சாலை ஓரங்களில் மழைநீா் தேங்கி காணப்பட்டது. தருமபுரி பகுதியில் பெய்த மழையினால் கேதாரா கௌரி விரதம் மேற்கொள்ள பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் வருகை குறைந்த நிலையில், விற்பனை மந்த நிலையில் காணப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பாலக்கோடு - 23, ஒகேனக்கல் - 7.6, அரூா் - 13, பாப்பிரெட்டிப்பட்டி - 4 மி.மீ. என மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 5.29 மி.மீ. பதிவாகியுள்ளது.
அரூரில்...
அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது.
தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி முதல் மாலை 4 மணி வரை மிதமான மழை பெய்தது.
இந்த மழை காரணமாக விவசாய நிலங்களிலும், சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது. விவசாயிகள், ஐப்பசி பட்டத்தில் நெல் நடவு, தக்காளி பயிரிடுதல், மானாவாரியாக அவரை, துவரை, உளுந்து பயிரிடுதல் உள்ளிட்ட பணிகளை தொடங்கியுள்ளனா்.