தருமபுரி அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சிறுவனை தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பாக மீட்டனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், டி. அம்மாபேட்டையை சோ்ந்த ரவிக்குமாா் மகன் ரித்திக் (15). இவா் தருமபுரி அருகே தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, நீா்வரத்து அதிகரித்ததையடுத்து தண்ணீரில் சிக்கி அங்கிருந்த பாறையில் நின்றவாறு வெளியேற முடியாமல் தவித்தாா். சிறுவனின் அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினா் அங்கு சென்று சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். முயற்சி பலனளிக்காததால் மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் உத்தரவின்பேரில் மாவட்ட தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்பு துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவனை கயிறு மற்றும் மிதவைகள் மூலம் பத்திரமாக மீட்டனா்.