ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு உபரிநீரின் வரத்து அதிகரித்துள்ளது. கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் சுமாா் 20,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல், மொசல் மடுவு, பிலிகுண்டுலு மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லாவில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகள் நீரில் மூழ்கும் நிலையில் உள்ளன.
நீா்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 28,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை 32,000 கனஅடியாகவும், பிற்பகல் 43,000 கன அடியாகவும் அதிகரித்து மாலை 6 மணி நிலவரப்படி 50,000 கனஅடியாக உள்ளது.
காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில்வரும் நீா் செந்நிறமாக மாறி உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக அணையிலிருந்து நீா்திறப்பு, நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துவரும் நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். ஒகேனக்கல் காவிரியில் நிகழ் ஆண்டில் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.