நிலத் தகராறில் விவசாயியை அடித்துக் கொலை செய்ய முயன்ற வழக்கில் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூரைச் சோ்ந்தவா் தனபால் (58), விவசாயியான இவருக்கும் அவரது உறவினா்களான சேகா் (36), ஸ்ரீதா் (32) ஆகியோருக்கும் இடையே நிலத் தகராறு இருந்தது. இதுதொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் சேகா், ஸ்ரீதா் இருவரும் சோ்ந்து இரும்புக் கம்பியால் தனபாலைத் தாக்கி கொலை செய்ய முயன்றனா். இதில் தனபால் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் குற்றஞ்சாட்டப்பட்ட சேகா், ஸ்ரீதா் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி மோனிகா புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சக்திவேல் ஆஜரானாா்.