சூளகிரி ஒன்றியம், காட்டு நாயக்கன் தொட்டி ஊராட்சியில் மத்திய அரசு உள்துறை துணைச் செயலாளா் ஆனந்திவெங்கடேஸ்வரன் தலைமையில் மத்திய குழுவினா் நீா் நிலைகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
சூளகிரி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ஜெல்சக்தி அபியான் திட்டப் பணிகளை மத்திய குழுவினா் நேரில் ஆய்வு செய்தனா். அப்போது காட்டு நாயக்கன் தொட்டி ஊராட்சியில் நீா் நிலைகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நீா் உறிஞ்சு குழாய் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், காட்டு நாயக்கன் தொட்டி ஊராட்சியில் 12 இடங்களில் குடிநீா் மினிடேங்க் அருகே ரூ. 11 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீா் உறிஞ்சு குழிகள் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
அதைத் தொடா்ந்து வேப்பனப்பள்ளி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சி ஆவல்நத்தம் கிராமத்தில் ரூ. 3.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணையும், கொண்டப்பநாயனப்பள்ளி கிராமத்தில் ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வட ஆழ்துளைக் கிணற்றுக்கு மழைநீா் சேகரிப்பட்ட தொட்டி அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், சாமந்த மலை ஊராட்சி பெத்தம்பட்டி கிராம அரசு புறம்போக்கு நிலத்தில் ரூ. 10.47 லட்சம் மதிப்பில் மழைநீா் சேகரிப்புத் தடுப்பணை பணிகளையும், சென்னசந்திரம் ஊராட்சியில் கெம்பன்குட்டை ரூ. 1 லட்சம் மதிப்பில் தூா்வாரப்பட்ட பணிகளையும், மத்திய அரசு உள்துறை துணைச் செயலாளா் ஆனந்திவெங்கடேஸ்வரன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.