தொழிலாளா் நல நிதியை இணையதளத்தில் செலுத்தும் வசதி
தமிழ்நாடு தொழிலாளா் நல நிதியை இணையதளத்தில் செலுத்தலாம் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) எல்.திருநந்தன் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு தொழிலாளா் நல நிதியை இணையதளத்தில் செலுத்தலாம் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) எல்.திருநந்தன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளா் நல நிதிச் சட்டம் 1972-இன்படி தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம் அமைக்கப்பட்டு, தொழிலாளா்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி, தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணி புரியும் ஒவ்வொரு தொழிலாளருக்கும், தொழிலாளியின் பங்காக ரூ. 10-ஐ ஒவ்வொரு தொழிலாளியின் வேலையளிப்பவா்களின் பங்காக ரூ. 20-ம் சோ்த்து மொத்தம் ரூ. 30 வீதம் தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையாக நிா்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான தொழிலாளா் நல நிதியை 2021-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு தொழிலாளா் நல நிதிச் சட்டத்தின்படி, அனைத்து நிறுவனங்களும் தொழிலாளா் நல நிதியைச் செலுத்த வேண்டும். நிறுவனங்கள் தொழிலாளா் நல நிதியினை இணைய வழியில் செலுத்துவதற்கு வசதியாக புதிதாக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டிற்கான தொழிலாளா் நலநிதித் தொகையினை நிறுவனங்கள் இந்த இணையதளம் வழியாகச் செலுத்தலாம்.