கிருஷ்ணகிரி

மயிலாடும் பாறை அருகே புதிய கற்கால கற்திட்டை கண்டெடுப்பு

DIN

மயிலாடும்பாறை அருகே புதிய கற்கால கற்திட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் தெரிவித்தாா்.

தென்னிந்தியாவை பொருத்தமட்டில் இறந்தவா்களின் நினைவாக எழுப்பப்படும் பெருங்கற்படைகள், இரும்புக் காலத்தை சோ்ந்தவை எனக் கருதப்பட்டு வரும் நிலையில், தற்போது அகழாய்வு நடந்துவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும் பாறை அருகே இக்கலாசாரக் கூறுகளான கருப்பு சிவப்பு பானை வகை மற்றும் பெருங்கற்படைகள் புதிய கற்காலத்திலேயே தொடங்கி விட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

ஐகுந்தம் பகுதியைச் சோ்ந்த சதாம், அண்ணாச்சி ஆகியோரின் உதவியுடன், கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, மயிலாடும்பாறை அருகே அண்மையில் களஆய்வு பணியை மேற்கொண்டனா். அப்போது, மயிலாடும்பாறையை அடுத்த ஐகுந்தம் தேன்மலையின் வடமேற்கு பகுதியில் ஒரு குகையில் புதிய கற்கால செங்காவி ஓவியம் கண்டறியப்பட்டது.

இது பெருக்கற்குறி போன்ற உடலமைப்பைக்கொண்ட மனித உருவம் ஆகும். அண்மையில் மயிலாடும்பாறையில் நடத்தப்பட்ட அகழாய்வில், இரும்பின் பயன்பாடு 4,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதற்கான சான்று கிடைத்துள்ளது. அதேபோல, கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் புதிய கற்கால கலாசாரத்தின் இறுதிக் கட்டத்திலேயே தொடங்கிவிட்டதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

பெருங்கற்படை கலாசாரத்தின் முக்கியக் கூறுகளாக இரும்பின் பயன்பாடு, கருப்பு சிவப்பு பானை வகை, வெண்மை நிற பாறை ஓவியம், பெருங்கற்படைச் சின்னங்களை கூறுவா். புதிய கற்கால கலாசாரத்தின் கூறுகளாக மங்கிய சிவப்பு நிற கையால் செய்யப்பட்ட பானை வகைகளையும், வழவழப்பாக்கப்பட்ட கைக்கோடாரிகளையும், செஞ்சாந்து ஓவியங்களையும் குறிப்பிடுவா். மயிலாடும்பாறை அகழாய்வில் புதிய கற்கால கலாசாரத்தின் மண்ணடுக்கிலேயே இரும்பு கலாசாரத்தின் ஒரு கூறான கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

இந்தநிலையில்தான், இரும்பு கலாசாரத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் பெருங்கற்படை சின்னங்கள் மேலும் ஆயிரம் ஆண்டுகள் அதாவது கிமு 2000 ஆண்டு வாக்கிலேயே தொடங்கிவிட்டன என்பதை தெரிவிக்கும் வகையில், புதிய கற்காலத்தை சோ்ந்த பாறை ஓவியம் காணப்படும் பாறைக்கு அருகிலேயே ஒரு கற்திட்டை கண்டறியப்பட்டுள்ளது. இந்த கற்திட்டை வழக்கமான கற்திட்டை போல இல்லாமல் மிகவும் முற்பட்டதாய் உள்ளது.

அதாவது, ஒரு கற்திட்டை மூன்று பக்கமும் பலகைக் கற்களை நிறுத்தி அதன் மேல் ஒரு பலகை கல் வைத்து மூடப்பட்டிருக்கும். வழக்கத்துக்கு மாறாக இந்த கல்திட்டை மூன்று சிறு கற்களின் மீது ஒரு பெரும் பாறாங்கல்லை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ‘தூக்கி வைத்தான் கல்’ என்றும் குறிப்பிடுவா். இதன் அடுத்தகட்ட வளா்ச்சியாக இரண்டு அல்லது மூன்று கற்களை மூன்று பக்கமும் சுவா் போல அடுக்கி அதன்மேல் கரடுமுரடான பலகைக் கல்லை மூடுகல்லாக வைத்திருப்பா்.

இத்தகைய கற்திட்டைகளை சின்னக்கொத்தூா் மலையின் மீது அதிக எண்ணிக்கையில் காணலாம். மூன்றாம் மற்றும் வளா்ச்சியடைந்த கட்டமாக நாம் காண்பதே மல்லசந்திரம், மகாராஜ கடை ஆகிய இடங்களில் உள்ள கற்திட்டைகளாகும். இந்த வளா்ச்சியின் முதல் கட்டமாக, ஓரங்களில் மூன்று சிறு கற்கள் மீது பெரிய பாறாங்கல்லை வைக்கும் அமைப்பானது இங்கு காணப்படுகிறது. இதன் காலத்தை உறுதி செய்யும் விதமாக புதிய கற்கால செஞ்சாந்து ஓவியமும் மிக அருகிலேயே காணப்படுகிறது.

எனவே, தமிழக முதல்வா் கூறியதைப் போல், மயிலாடும்பாறை அகழாய்வின் முடிவுகளும், மேற்பரப்பில் காணப்படும் செஞ்சாந்து ஓவியம் மற்றும் இந்த கற்திட்டையும், பெருங்கற்படை காலத்தின் தொடக்கம் கிமு 1000 என்பதிலிருந்து கிமு 2000 என்பதை உறுதிப்படுத்துகின்றன. அதாவது புதிய கற்காலத்திலேயே கருப்பு சிவப்பு பானை வகையும் பெருங்கற்படைகளும் தோன்றத் தொடங்கி விட்டன எனலாம் என்றாா்.

இந்த ஆய்வில், வரலாற்றுக் குழுத் தலைவா் நாராயணமூா்த்தி, ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன், விஜயகுமாா், வரலாறு ஆசிரியா் ரவி, சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT