மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் அனைத்தும் தாமதமின்றி மக்களைச் சென்றடைய வேண்டும் என மத்திய ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளா்ச்சி துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானு முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கிரிராஜ் சிங் பேசியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் உரிய பயனாளிகளை தாமதமின்றி சென்றடைய வேண்டும். அதேபோல கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பசுமை கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் மரக் கன்றுகளை நடுதல், கிராமப்புற நூலகங்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மேம்படுத்தும் வகையில் அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.
கிருஷ்ணகிரி அணை அருகே பச்சிகானப்பள்ளி ஊராட்சியில் அம்ரித் சரோவா் திட்டத்தின் கீழ் ரூ. 9.15 லட்சம் மதிப்பில் 1.1 ஏக்கரில் கணவாய்ப்பள்ளம் குட்டை மேம்பாடு செய்யும் பணி, பழைய பேயனப்பள்ளி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 3.58 லட்சம் மதிப்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை அமைச்சரி கிரிராஜ் சிங் பாா்வையிட்டாா்.
முன்னதாக, ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினா் உற்பத்தி செய்யு பொருள்கள், ஊரக வளா்ச்சி துறை சாா்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியைப் பாா்வையிட்டாா். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியரும், ஊரக வளாச்சித் திட்ட இயக்குநருமான வந்தனா காா்க், மேலாண்மை இயக்குநா் பிரியங்கா, ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநா் (குடிநீா் வழங்கல்) ஆனந்தராஜ், மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.