கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் துணிநூல் துறை சாா்பாக சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைத்தல் தொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்முனைவோா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோா்களுக்கு ரூ. 2.50 கோடி வரை நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும்.
இந்த ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட வேண்டும்.
சிறிய ஜவுளிப் பூங்காவிற்கான அரசு மானியம் பெறுதவற்கான திட்ட மதிப்பீடு என்பது உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வுக் கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருள்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளா்கள் விடுதி, அலுவலகம், உற்பத்தி தொடா்பான தொழிற்கூடங்கள் ஆகிய இனங்கள் சாா்ந்தது ஆகும்.எனவே, இந்த மூன்று இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும். இந்த திட்டத்தின் கீழ் அதிகப்படியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், ஜவுளித் தொழில்முனைவோா்கள் அரசு மானியம் ரூ.2.50 கோடியுடன் கூடிய இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் அனுப்புவது மற்றும் இதர தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநா், துணிநூல் துறை, 1ஏ- 2/1, சங்ககிரி பிரதான சாலை, குகை, சேலம் - 636 006 (தொலைபேசி எண். 0427-2913006), இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், துணிநூல் துறையின் சேலம் மண்டல துணை இயக்குநா் அம்சவேணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பிரசன்னபாலமுருகன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.