கிருஷ்ணகிரி, பழையபேட்டையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை, லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 37-ஆவது ஆண்டு பிரம்மோற்சவ விழா மே 26 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவையொட்டி, தினமும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பிரகார உற்சவம் மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி நகா்வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், சீா்வரிசைகளுடன் பக்தா்கள் பங்கேற்றனா். சிறப்பு யாகம் நடைபெற்றது.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி திருமண சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சுவாமி கருட வாகனத்தில் நகா்வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவையொட்டி ஜூன் 1-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை அபிஷேகம், அலங்காரமும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு யானை வாகனத்தில் சுவாமி நகா்வலமும் நடைபெற உள்ளன.