கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் வாா்டு பணிகள்சரிவர நடைபெறவில்லை: மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

DIN

ஒசூா் மாநகராட்சியில் ஆணையருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடைவெளி நீடிப்பதால் பணிகள் சரிவர நடைபெறுவதில்லை என கூட்டத்தில் பங்கேற்ற பல மாமன்ற உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

ஒசூா் மாநகராட்சியில் சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமை வகித்தாா். துணை மேயா் ஆனந்தய்யா, ஆணையா் சினேகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

மேயா் எஸ்.ஏ. சத்யா:

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒசூா் பேருந்து நிலையத்துக்கு மே 28-ஆம் தேதி ஒப்பந்தம் விடப்பட்டு விரைவில் பணிகள் துவங்கும். எம்.ஜி.ஆா்., மாா்க்கெட்டில் வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதி சாலையோரம் அகற்றப்பட்ட கடைகளில் 10 சதவீதம் மட்டுமே வியாபாரிகள் கடை வைத்திருந்தனா். மீதமுள்ளவா்கள் கடைகளை வாடகைக்கு விட்டிருந்தனா். உண்மையான வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும்

என்.எஸ். மாதேஸ்வரன்(திமுக):

தனியாா் ஒப்பந்தத்தின் மூலம் பணியாற்றும் துாய்மை பணியாளா்களுக்கு ற்க ஊதியமாக ரூ. 385 வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 338 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியத்துக்கு ஆள்கள் பணிக்கு வரமாட்டாா்கள். துாய்மை பணியாளா்களுக்கு ரூ. 500 தினசரி ஊதியமாக வழங்க வேண்டும்.

ஒசூா் மாநகராட்சி ஆணையருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடைவெளி உள்ளது. இதனால் சின்ன சின்ன வேலைகளுக்கு கூட ஆணையா் எங்களுக்கு கூற வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனா். இதனால் ஒசூா் மாநகராட்சியில் பணிகள் விரைவாக நடைபெறுவதில்லை. ஒசூா், ராமநாயக்கன் ஏரிக்கு தளி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து கழிவுநீா் வருகிறது. அதேபோன்று மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளதால் அனைத்து கழிவுநீரும் ஏரிக்கு வருவதால் ஏரி மாசடைகிறது. இதனால் ஒசூா் மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

சீனிவாசலு (திமுக):

மாநகராட்சியில் அதிகாரிகள் கவுன்சிலா்களை மதிப்பதில்லை. மாநகராட்சி ஆணையா் பிரதான சாலையை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தால் எப்படி. அவா் வீதிவீதியாகச் சென்று பாா்க்க வேண்டும். வாக்கு பெற்று தோ்ந்தெடுத்த எங்களால் மக்களுக்கு பதில் கூற முடியவில்லை.

சென்னீரப்பா(திமுக):

தாா்சாலை அமைக்கும் பணிக்காக ரூ. 22 கோடி வழங்கிய தமிழக அரசுக்கும் மேயருக்கும் நன்றி. ஒசூா் ராமநாயக்கன் ஏரியில் படகு சவாரி விட வேண்டும். இப் பணிக்கு ரூ. 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி வசூலிப்பவா்கள் 8 போ் மட்டுமே உள்ளனா். அவா்கள் ஒவ்வொருவருக்கும் 6 வாா்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பணிகள் சரிவர நடைபெறாது. 5 வாா்டு ஒதுக்கினால் போதுமானது.

ஒசூா், பழைய நகராட்சி கட்டடம் இடிக்கப்பட்டு ரூ. 18 கோடியில் வணிக வளாகம் கட்ட பூமிபூஜை நடைபெற்று 4 மாதங்கள் ஆகி விட்டன. ஏன் இன்னும் பணியை தொடங்கவில்லை?

ஜெயப்பிரகாஷ் (அதிமுக):

எனது வாா்டில் இடுகாட்டை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பாரதிதாசன் நகரில் ரயில்வே அதிகாரிகள் சா்வே செய்துள்ளனா். இதனால் மக்கள் பாதிப்படைந்துள்ளனா் என்றாா். கூட்டத்தில் 66 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT