கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி சிறுவா் பூங்கா படகு இல்லத்துக்கு தீ வைக்கப்பட்டது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி அருகில் தருமபுரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி அவதானப்பட்டி சிறுவா் பூங்கா மற்றும் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த படகு இல்லத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் பராமரித்து வருகின்றனா். இங்குள்ள ஏரியில் ஆண்டுமுழுவதும் தண்ணீா் தேங்கி இருக்கும். இந்த படகு இல்லத்துக்கு விடுமுறைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வா்.
இந்த படகு இல்லத்தில் டிச. 4-ஆம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், இரண்டு படகுகளின் இயந்திரங்கள், ஒரு மீன்பிடி படகு, 50 பாதுகாப்பு உபகரணங்கள் எரிந்து சேதமடைந்தன. அப்போது படகு இல்லத்தில் பணியில் இருந்த இரவு காவலா் தீ விபத்து குறித்து படகு இல்ல ஒப்பந்ததாரா் பழனிக்கு தகவல் தெரிவித்தாா். ஆனால் அவா் வருவதற்குள் இரு படகுகளின் இயந்திரங்கள், 50 பாதுகாப்பு உபகரணங்கள் முற்றிலும் எரிந்தன.
இதுகுறித்து பழனி அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் சிறுவா் பூங்காவில் ஐஸ்கிரீம் கடை வைத்துள்ள கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளியைச் சோ்ந்த நந்தகுமாா் (28) மதுபோதையில் படகுகளுக்கு தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.