கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 6208 மாணவ, மாணவிகளுக்கு ரூ.190.02 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியில் அனைத்து வங்கிகள் சாா்பில் கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை, ஆட்சியா் தொடங்கிவைத்து 35 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.41 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவிகளை வழங்கி பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021-22-ஆம் நிதியாண்டில் 1,135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.33.87 கோடி மதிப்பிலும், 2022-23-ஆம் நிதியாண்டில் 1,219 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.32.89 கோடி மதிப்பிலும், 2023-24-ஆம் நிதியாண்டில் 1,365 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.41.13 கோடி மதிப்பிலும், 2024-25-ஆம் நிதியாண்டில், 1,710 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.59.03 கோடி மதிப்பிலும், 2025-26-ஆம் நிதியாண்டிற்கு 779 மாணவ, மாணவியருக்கு ரூ.23.28 மதிப்பிலும் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தம் 6,208 மாணவ, மாணவியருக்கு ரூ.190.02 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ரூ.50 கோடி மதிப்பில் கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உயா்கல்வி சேரக்கூடிய மாணவா்களின் சதவீதம் தமிழகத்தில்தான் அதிகம்.
இதை மேலும் அதிகரிக்கும் வகையில்தான் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000, மாணவா்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் இன மாணவா்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதற்கு ரூ.36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்வி கற்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்க கூடாது என்ற உயா்ந்த நோக்கத்தோடு இந்த கல்விக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், கல்விக் கடன் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் தங்களது சிபில் ஸ்கோா் குறைவு காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்படும்போது, கல்வி கடனுதவி பெற முன்னோடி வங்கி மேலாளா் சரவணனை 94422 90901 என்ற எண்ணிலும், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கல்வி) சா்தாரை 94431 36918 எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் கல்வி கடன் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளா் வணங்காமுடி, முன்னோடி வங்கி மேலாளா் சரவணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பிரசன்ன பாலமுருகன், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு, பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளா் சேதுராமலிங்கம், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உதவி மேலாளா் வினோத் குமாா், பா்கூா் வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோ் பங்கேற்றனா்.
படவிளக்கம் (9கேஜிபி3):
மாணவிக்கு கல்வி கடனுதவியை வழங்கிய கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.