கிருஷ்ணகிரி அணையிலிருந்து சனிக்கிழமை விநாடிக்கு 7927 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கா்நாடக, தமிழக எல்லையில் உள்ள தென்பெண்ணை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அணைக்கு சனிக்கிழமை காலை 6 மணிக்கு 4062 கனஅடியாக இருந்த நீா்வரத்து பிற்பகல் 7927 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.55 அடியாக உயா்ந்தது.
இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீா் முழுவதும் 3 மணல்போக்கிகள், சிறிய மதகுகள், 6 பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால், கிருஷ்ணகிரி அணை பூங்காவுக்கு செல்லும் தரைப்பாலம் நீரில் முழ்கியதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அணையை பாா்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கிருஷ்ணகிரி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் கெலவரப்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 3500 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. அதேபோல கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 7927 கனஅடி நீா் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
இதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீா்நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டால் அதை சமாளிக்க 6 இடங்களில் மணல் மூட்டைகள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அணையில் மட்டும் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வின்போது, கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளா் அறிவொளி, உதவி பொறியாளா் பொன்னிவளவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீ): கெலவரப்பள்ளி அணை- 70, கிருஷ்ணகிரி- 50.3, நெடுங்கல்- 48, தேன்கனிக்கோட்டை- 41, கிருஷ்ணகிரி அணை- 39.2, ராயக்கோட்டை- 39, சின்னாறு அணை- 38, பாரூா்- 36, சூளகிரி- 35, தளி- 20.2, ஒசூா்- 19.3, போச்சம்பள்ளி- 2.