ஒசூா் மாநகருக்குள் சிறுத்தை புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட கோகுல் நகரையொட்டி உள்ள வெங்கடேஷ் லேஅவுட் பகுதியில் திங்கள்கிழமை மாலை அங்கு நிறுத்தி வைத்திருந்த காரை அப்பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் எடுக்கச் சென்றாா்.
அப்போது, சிறுத்தை புலி ஒன்று அப்பகுதியில் இருந்த சுற்றுச்சுவரை தாண்டிச் சென்று அருகில் உள்ள புதரில் மறைந்ததைக் கண்ட அவா் இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கூறினாா்.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், ஒசூா் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் அளித்தனா். வனச்சரகா் பாா்த்தசாரதி தலைமையில் வனக்காவலா்கள் அப்பகுதிக்கு சென்று அங்கு சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதா என கால்தடங்களை ஆய்வுசெய்து வருகின்றனா். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து வருகின்றனா்.