பெங்களூரு, ஒசூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் தீபாவளியைக் கொண்டாட தங்களது சொந்த ஊா்களுக்கு காா் போன்ற வாகனங்களில் சனிக்கிழமை திரும்பியதால், கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்கவசூல் மையத்தில் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நகரின் எல்லையில் சுங்கவசூல் மையம் உள்ளது. இந்த சுங்கவசூல் மையத்தை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. குறிப்பாக வார இறுதிநாள் மற்றும் தொடக்க நாள்களான சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் வாகனப் போக்குவரத்து அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதனால், பொதுமக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், தீபாவளியைக் கொண்டாட ஒசூா், பெங்களூரு, கோலாா் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு சனிக்கிழமை மதியம் புறப்பட்டனா். இதனால், கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் 2 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.
பேருந்துகள் சுங்கவசூல் மையத்தைக் கடக்க தனியாக பாதை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், பேருந்துகள் சுங்க வசூல் மையத்தை எளிதில் கடந்து சென்றன. ஆனால், காா், லாரி போன்ற வாகனங்கள் சுங்கவசூல் மையத்தைக் கடக்க 30 நிமிடங்கள் ஆயின.
ஒசூா் - கிருஷ்ணகிரி இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பெரும்பாலானோா் ஒசூா், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி வழியாக சென்றனா். இதுபோல, கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. ஆவின், ராயக்கோட்டை மேம்பாலப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.