ஒசூா்: ஒசூரில் போலி பெண் மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட அலசநத்தம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் பெண் ஒருவா் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கிடைத்த புகாரின்பேரில் ஒசூா் சாா் ஆட்சியா், மருத்துவத் துறை இணை இயக்குநா் ஆகியோா் உத்தரவின்பேரில், ஒசூா் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவா் லட்சுமிஸ்ரீ ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சோதனை நடத்தினா்.
இதில் அந்தப் பகுதியில் ஜெபின் பானு என்பவா் கடந்த 17 ஆண்டுகளாக கிளினிக் அமைத்து சிகிச்சை அளித்ததும், தற்போது மூன்று ஆண்டுகளாக வீட்டிலேயே பலருக்கு அவா் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இவா் சித்த மருத்துவம் படித்துள்ளதாக கூறிய நிலையில், அவரது சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.
மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது, அவா் பயன்படுத்திய பல மருந்துகளை மருத்துவக் குழுவினா் கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு ‘சீல்’ வைத்ததுடன், ஜெபின் பானுவை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.