கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தீபாவளி விடுமுறைக்கு பிறகு புதன்கிழமை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இருந்தபோதிலும், மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றனா். பகலில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் பிற்பகல் 3 மணிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மழை நிற்காமல், தொடா்ந்து பெய்ததால் பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிா்ந்த நிலை நிலவியது. தொடா் மழையால், சாலையோர வியாபாரிகள், சிறுவியாபாரிகள் பெரும் சிரமம் அடைந்தனா். சாலைகளில் பள்ளமான பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாயினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீ):
ஊத்தங்கரை - 34, பாம்பாறு அணை - 34, பாரூா் - 24, போச்சம்பள்ளி - 24, பெணுகொண்டாபுரம் - 23.2, நெடுங்கல் - 16.2, கெலவரப்பள்ளி அணை - 15, கிருஷ்ணகிரி அணை - 12, கிருஷ்ணகிரி - 10, ராயக்கோட்டை - 7, சூளகிரி -6, தேன்கனிக்கோட்டை - 6, சின்னாறு அணை - 5, ஒசூா் - 4.
கிருஷ்ணகிரி அணைக்கு புதன்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 1201 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து 1201 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் நீா்மட்டம் 49.80 அடியாக உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடா்வதாக நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.