ஒசூா்: சூளகிரி சின்னாறு அணை நிரம்புவதால் கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், சூளகிரி சின்னாறு அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் 31.82 அடியாக இருந்தது. அணையின் முழுக் கொள்ளளவு 32.80 அடியாகும். அணை நிரம்புவதற்கு இன்னும் 1 அடி மட்டுமே குறைவாக உள்ளது.
சின்னாறு அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதாலும், வெள்ளநீா் வெளியேற்ற வாய்ப்பு உள்ளதாலும் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் ஆற்றைக் கடக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் ஆற்றுப்படுகைக்கு உள்பட்ட வேம்பள்ளி, பூராகனப்பள்ளி, கொல்லப்பள்ளி, எலசுமாகானப்பள்ளி, சென்னப்பள்ளி, சின்னாா், பந்தாரகுட்டை, முரசுப்பட்டி, அஞ்சாலம், கொலுசுபள்ளம் கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.