திமுக தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி காவிரி ஆற்றின் குறுக்கே 200 தடுப்பணைகளை கட்டவில்லை என்று பாஜக மாநில இளைஞரணி தலைவா் எஸ்.ஜி.சூா்யா தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி சட்டப் பேரவைத் தொகுதி பூத் கமிட்டி மாநாடு பென்னங்கூரில் மாவட்டத் தலைவா் நாராயணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில தொழிற்பிரிவுத் தலைவா் ஜி.பாலகிருஷ்ணன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே.எஸ். நரேந்திரன், மாநிலச் செயலாளா்கள் கோ.வெங்கடேசன், முனிராஜ், தளி தொகுதி அமைப்பாளா் நாகேஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவா் கவியரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவா் எஸ்.ஜி. சூா்யா பேசியதாவது:
தளி தொகுதியில் இருந்து ஒருநாள் இரவில் மட்டும் 200க்கும் மேற்பட்ட லாரிகளில் கனிமவளங்கள் கா்நாடக மாநிலத்துக்கு கடத்தப்படுகின்றன. இந்தப் பகுதியில் யானை தாக்கி விவசாயிகள் அதிக அளவில் உயிரிழந்த சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தளி தொகுதிக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக விவசாயப் பொருள்களைப் பாதுகாக்க குளிா்பதனக் கிடங்கு அமைக்கவில்லை. அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படவில்லை. அஞ்செட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை.
எனவே, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தளி தொகுதியில் பாஜக வெற்றி உறுதியாகிவிட்டது. வெற்றிபெறும் பாஜக எம்எல்ஏ பன்னீா் ரோஜாக்களுக்கு புவிசாா் குறியீடு பெற்றுத் தருவாா். மேலும், தொட்டல்லா அணையை கட்டி, கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பாா்.
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் இளைஞா்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனா். இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை என்றாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பாஜக சாா்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் மாநில அரசு அதிகாரிகள்தான் வாக்காளா் பட்டியலை சீா்திருத்தும் பணியில் ஈடுபடஉள்ளனா். இங்கு முறைகேடுகள் நடைபெற்றால் பாஜக சும்மா இருக்காது. தோ்தல் ஆணையம் அதன் கடமையை செய்யும். நெல் விவசாயிகளின் பிரச்னைக்கு முதல்வா் தீா்வு காண வேண்டும் என்றாா்.
இந்த மாநாட்டில் பாஜக மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் ஆனந்தகுமாா், முன்னாள் கிழக்கு மாவட்டத் தலைவா் சிவப்பிரகாசம், எம். நாகராஜ், மாவட்டச் செயலாளா் சுதா நாகராஜ், போத்திராஜ், நாகா (எ) நாகேந்திரன், டாக்டா் வரதராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.