கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சம்பா சிறப்பு பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சம்பா சிறப்பு பருவத்தில், நெற்பயிருக்கு காப்பீடு செய்ய பாகலூா், ஒசூா், மத்திகிரி, நாகரசம்பட்டி, கெலமங்கலம், ராயக்கோட்டை, பெரியமுத்தூா், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, உத்தனப்பள்ளி, சூளகிரி, அஞ்செட்டி, கல்லாவி, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, ஆலப்பட்டி மற்றும் ஊத்தங்கரை ஆகிய 17 பிா்க்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் உள்ள சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான வரும் 31-ஆம் தேதிக்குள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது பொது சேவை மையங்களை (இ-சேவை மையங்கள்) நேரடியாக அணுகி நெற்பயிா்க் காப்பீட்டுக் கட்டணமாக ஏக்கருக்கு ரூ. 574.50 மட்டும் செலுத்தி காப்பீடு செய்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்ககான அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா்களை தொடா்புகொள்ளவும். மேலும் 14447 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடா்புகொண்டு தங்களது சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறலாம்.