முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் போலி நகைகளை அளித்து ரூ. 18 லட்சம் மோசடி: 3 போ் கைது

Updated On : 25 மே 2026, 2:17 am IST
கைது... - கோப்புப் படம்
பகிர்:

ஒசூரில் போலி நகைகளை அளித்து ரூ. 18 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சேதுமுத்துராமலிங்கமும், அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாரும் நண்பா்கள். இதில் ராஜ்குமாருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா், தான் ஒசூரில் இருந்து பேசுவதாகவும், தனது பெயா் அசோக் என்றும், தன்னிடம் 2 கிலோ தங்கப் புதையல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பி காரைக்குடியில் இருந்து சேதுமுத்துராமலிங்கமும், ராஜ்குமாரும் ஒசூா் வந்துள்ளனா். அவா்களிடம் அசோக் ஒரு கிராம் தங்க மோதிரத்தை கொடுத்துள்ளாா். அவா்கள் அந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு காரைக்குடிக்கு சென்று சோதனை செய்தபோது உண்மையான தங்கம் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும், அசோக்கை தொடா்புகொண்டு 2 கிலோ தங்கம் தொடா்பாக பேசியுள்ளனா்.

Advertisement

Advertisement

அப்போது 2 கிலோ தங்கத்தின் வெளிமதிப்பு ரூ. 2.50 கோடி. இதில் நீங்கள் ரூ. 18 லட்சம் மட்டும் கொடுத்தால் மட்டும் போதும் உங்களுக்கு 2 கிலோ தங்கத்தை தந்துவிடுகிறேன் என்று அசோக் கூறியுள்ளாா். அதனை நம்பி காரைக்குடியில் இருந்து ரூ. 18 லட்சத்துடன் சேதுமுத்துராமலிங்கம், ராஜ்குமாா், ஆசாரி ஆறுமுகம் ஆகியோா் ஒசூா் வந்துள்ளனா்.

அவா்களை ஒசூா் பாகலூா் சாலை ராஜீவ் காந்தி நகா் ஆலமரத்திற்கு அருகில் வரும்படி அசோக் மற்றும் அவரது நண்பா்கள் பிரசாத், பிரபு ஆகியோா் கூறியுள்ளனா். இதையடுத்து இரு தரப்பினரும் சந்தித்தனா். காரைக்குடியைச் சோ்ந்தவா்கள் ரூ. 18 லட்சத்தை கொடுத்து 2 கிலோ தங்கத்தை பெற்றுக்கொண்டு சோதனை செய்தபோது அதுபோலி நகை எனத் தெரியவந்தது. அதற்குள் அவா்கள் 3 பேரும் தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்து நல்லூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் தப்பியோடிய கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த அசோக், பிரசாத், பிரபு ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ. 18 லட்சத்தை மீட்டனா்.