பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பணி நாமக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டதின் கீழ் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள நபர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் சமூக, பொருளாதார மற்றும் சாதி அடிப்படையிலான கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கும் விழா நாமக்கல்லில் வியாழக்கிழமை நடந்தது. நாமக்கல் பரமத்தி சாலை அண்ணா நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு பாஜக நாமக்கல் நகர தலைவர் ஆர்.வரதராஜன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட தலைவர் என்.பி.சத்யமூர்த்தி, துணைத் தலைவர் எம்.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு முதல் கட்டமாக சமையல் எரிவாயு உருளைகளை வழங்கி, இத் திட்டம் குறித்தும் மேலும் மத்திய அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கிப் பேசினர். தொடர்ந்து இந்துஸ்த்தான் பெட்ரோலியம் நிறுவன நாமக்கல் முகவர் பி.பிரபு இந்த திட்டத்தில் எவ்வாறு இணைந்து கொள்ளலாம் என்பது குறித்தும் என்னென்ன ஆவணங்கள் வழங்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார்.
முதல் கட்டமாக, வளையப்பட்டி, ராசாம்பாளையம், அண்ணாநகர், சந்தைபேட்டைபுதூர் மற்றும் வரகூர் ஆகிய பகுதிகளில் 100 பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், 1,000 இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. மேலும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, தொடர்ந்து இணைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.