மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் கேட்டுக் கொண்டார்.
நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், அனைத்து தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் உரிமைகள் வழங்கி, பாகுபாடு களைவதை உறுதிசெய்யும் விதமாக, உணர்வூட்டும் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பேசியது: தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், தனியார் நிறுவனங்கள் முழுமையாக ஏற்படுத்தித் தரவேண்டும். மற்றவர்களைப் போலவே மாற்றுத் திறனாளிகளையும் சமமாக மதித்து, அவர்களுக்கும் சம உரிமை வழங்கிட வேண்டும்.
அரசின் திட்டங்களாலும், மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படுகின்ற பயிற்சிகளாலும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் நல்ல கல்வி அறிவு பெற்று வருகின்றனர். கணினி துறை போன்ற பல்வேறு துறைகளிலும் மாற்றுத் திறனாளிகள் சிறந்து விளங்கி வருகின்றனர். அத்தகைய மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகளையும், வேலைவாய்ப்புகளையும் தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்தித்தர முன்வர வேண்டும்.
நாமக்கல் மாவட்டம், தொழில் சார்ந்த மாவட்டம். ஆதலால் இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அத்தகைய தொழில் நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க முன்வருவதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்தித் தரவேண்டும். தனியார் தொழில் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கும் நல்ல பயிற்சியினையும், வேலைவாய்ப்பினையும் உருவாக்கித் தருவதோடு, அவர்களுக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.
முகாமில் நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி வரவேற்றார். நாமக்கல் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ ஆலோசகர் எஸ்.பூபதிராஜா, நாமக்கல் தமிழ் உயர் ஆய்வு மைய உதவி பேராசிரியர் பொன்.கதிரேசன், ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.