நாமக்கல்லில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெருமன்றத்தின் 2 - ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
திரைப்படப் பாடல்கள் மூலம் சிந்தனைகளையும், பல அரிய கருத்துகளையும் மக்களிடையே பரவச் செய்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெருமன்றத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, நாமக்கல் நளா ஹோட்டலில் சனிக்கிழமை (ஜூலை 27) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு, நாமக்கல் தமிழ் சங்கத் தலைவர் மருத்துவர் இரா.குழந்தைவேலு தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.கே.வேல் வரவேற்கிறார். கே.கே.பி.குழுமத் தலைவர் கே.கே.பி.நல்லதம்பி, குமார் பீட்ஸ் வி.குமரவேலு, கொங்குநாடு அறக்கட்டளை தலைவர் எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், பெருமன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.எஸ்.மணி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.தம்பிராஜா நன்றி உரையாற்றுகிறார். விழாவில் கவிஞர்களும், எழுத்தாளர்களும், படைப்பாளர்களும், தமிழ் ஆர்வம் கொண்டவர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெருமன்ற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.