நாமக்கல்

நாமக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: குறைதீர்க் கூட்டத்தில் வலியுறுத்தல்

DIN

நாமக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுத்தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிப்பால் கடந்த  மூன்று மாதங்களாக கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், சார் -ஆட்சியர் சு.கிராந்திகுமார்பதி, வேளாண் இணை இயக்குநர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடுத் திட்டம் குறித்தும், அதனால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் விடியோ மூலம் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து, விவசாயிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில், ஒவ்வொருவராக  பேசினர்.
விவசாயி மெய்ஞானமூர்த்தி பேசியது:  நாமக்கல் மாவட்டத்தில் கடுமையான  குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மனிதர்களுக்கு மட்டுமின்றி,  கால்நடைகளுக்கும், விவசாயப் பயிர்களுக்கும் போதுமான  தண்ணீர் இல்லை. வனத்தில் இருந்த குரங்குகள், மயில்கள்  எல்லாம் இரை,  தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. அனைத்துத் தரப்பையும் பாதுகாக்கும் வகையில், நாமக்கல்லை வறட்சி  மாவட்டமாக அறிவித்து, அது தொடர்பான கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி துரைசாமி பேசியது: ராசிபுரம் வட்டத்தில்  மரவள்ளி, சோளம்,  நிலக்கடலை போன்றவை தண்ணீரின்றி கருகி விட்டன. ஆண்டில், 200 நாள்கள் மழைப் பொழிவு இல்லை.   ஒவ்வொரு விவசாயிக்கும்,  அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் என்ற அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றார்.
ஆட்சியர்: உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும்,  அவர்களது குடும்பத்தினருக்கும் அரசால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக யாருக்காவது தெரியாதபட்சத்தில், தெரிந்த விவசாயிகள் அத்தகவலை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
விவசாயிகள் குப்புத்துரை,  வையாபுரி  பேசியது: தற்போதைய வறட்சியால்  7 ஆயிரம் தென்னை மரங்கள் காய்ந்து விட்டன. இதற்கு முன்பு ஆட்சியராக இருந்த தட்சிணாமூர்த்தி, அப்போது ஒரு தென்னை மரத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கினார். அதுபோன்று தற்போதும் வழங்க வேண்டும். ராஜவாய்க்காலில் கூடுதல் நீர் திறந்து விட வேண்டும். மேட்டூர் அணையில் ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட்டால், அதில் 235 கனஅடி வந்து சேர வேண்டும். ஆனால், 135 கனஅடி மட்டுமே வருகிறது. அதிலும் 100 கனஅடி மீண்டும் காவிரி ஆற்றுக்கே சென்றடைகிறது.
அதேபோல, சோழசிராமணிக்கும், ஈரோடு மாவட்டம் கருவேலம்பாளையத்துக்கும் இடையே படகுப் போக்குவரத்து இருந்தது.  அங்கு தற்போது மணல் குவியலாக உள்ளது. இதனால் பல மாதங்களாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறையினர் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் போக்கு உள்ளது. உருண்டை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் கரும்பு பயன்படுத்துவதே இல்லை. சர்க்கரையைக் கொண்டு வெல்லம் தயாரிப்பதால் விவசாயிகள் தான் பாதிக்கப்படுகின்றனர். உணவு பாதுகாப்பு அலுவலர்களும் நடவடிக்கை எடுப்பதில்லை  என்றனர். 
ஆட்சியர்:  படகுப் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். வெல்லம் தயாரிப்பில் நடக்கும் முறைகேடு தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வு மேற்கொள்ளும் என்றார்.
எம்.ஜி.ராஜேந்திரன் பேசியது: வறட்சி நிலவுவதால், சொட்டுநீர்  பாசன முறையை அனைத்துப் பகுதியிலும் கொண்டு வரவேண்டும்.  பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். ஆனால்  விலையை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி பாலுக்கான விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
விவசாயி செல்வன் பேசியது: மக்களவைத் தேர்தலில் 5 சதவீத அரசு ஊழியர்களின் வாக்குகள் செல்லாதவையாக போடப்பட்டுள்ளன. இவ்வாறான ஊழியர்கள் எவ்வாறு விவசாயிகளின் பிரச்னையைத் தீர்ப்பார்கள் என்றார். 
இதற்கு பதிலளித்த ஆட்சியர்,  தபால் வாக்குகளில் ஆயிரம் விதிமுறைகள் உள்ளன. அதை மையப்படுத்தி யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம். விவசாய பிரச்னை இருந்தால் புகார் கூறலாம் என்றார். 
அதனைத் தொடர்ந்து பேசிய செல்வன், கூட்டுறவு சங்கங்களில், நியாய விலைக் கடைகளில் பொருள்களை வாங்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பொருள்களை வாங்க முன்வருவார்களா? என கேள்வி எழுப்பினார். 
தொடர்ந்து பேசிய ஆட்சியர்,  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.  இக்கூட்டத்தில், அரசுத் துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சாய்பாபா கோயிலில் ராம நவமி வழிபாடு

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

SCROLL FOR NEXT