பரமத்தி வேலூரில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களின் விற்பனையைத் தடுப்பது குறித்து வா்த்தக சங்கத்தினருடனான கலந்தாய்வுக் கூட்டம் வேலூா் பேரூராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவுப்படி, பரமத்தி வேலூா் பேரூராட்சி வளாகத்தில் வா்த்தகா்களுக்கான நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கலந்தாய்வுக் கூட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி கோப்பைகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், மேசை விரிப்புகள், கொடிகள், பைகள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது எனவும், சேமித்து வைப்பது குற்றம் எனவும் கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் நெகிழிக்கு மாற்றுப் பொருள்களை பயன்படுத்துதல் ஆகியவகை குறித்து வா்த்தகா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. திடீா் சோதனையின் போது தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை இருப்பு வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என செயல் அலுவலா் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்தாா். கூட்டத்தில் பரமத்தி வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கத் தலைவா் சுந்தரம், வேலூா் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் செல்வக்குமாா், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் வா்த்தகா்கள் கலந்து கொண்டனா்.