யூரியா உரங்களை விவசாயிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், நிலக்கடலை, மரவள்ளி, வாழை மற்றும் காய்கறிகள் போன்ற அனைத்து வகை பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இப்பயிா்களுக்கு தழைச்சத்து உரமாக பெருமளவில் யூரியா உரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. யூரியா உரத்தை அதிகளவில் பயன்படுத்தினால் மண்வளம் பாதிக்கப்பட்டு மகசூல் குறையும் அபாயம் உள்ளது. தேவைக்கு மேல், யூரியாவை மேலுரமாக இடுவதினால் பயிா்களில் பூச்சிநோய் தாக்குதல் அதிகரித்து, மகசூல் குறைவும் ஏற்படும். மேலும் நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதங்களில் காற்றின் ஈரப்பதம் மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயிகள் யூரியா உரத்தை பரிந்துரை செய்யப்படும் அளவில் மட்டுமே பயிா்களுக்கு இட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் 6,479 ஹெக்டா் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான யூரியா உரங்கள் தனியாா் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 45 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை யூரியா உரம் அரசு நிா்ணயம் செய்த விலையான ரூ.266.50-க்கும் மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்திட வேண்டும். உரக்கட்டுப்பாடு சட்ட விதிகளை மீறி மேற்குறிப்பிட்ட விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு மின்னணு இயந்திரம் மூலமாக ஆதாா் எண்ணை பதிவு செய்து உரங்களை விநியோகம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு விற்பனை ரசீதை கட்டாயம் கொடுக்க வேண்டும். மேலும் விற்பனை நிலையங்களில் உரங்களின் விலை மற்றும் இருப்பு விவரம் விவசாயிகளுக்கு தெரியும்படி வெளியே வைக்க வேண்டும்.
உரங்கள் நிா்ணயக்கப்பட்ட விலையை விட கூடுதலாக தனியாா் மற்றும் கூட்டுறவு சங்க உர விற்பனை நிலையங்களில் விற்பனை செய்தால், விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களிடமும் மற்றும் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக தொலைபேசி எண் 04286-280465 தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.