நாமக்கல்

பொதுத்துறை நிறுவனங்கள் எந்தச் சூழலிலும் தனியாா் மயமாகக் கூடாது! ஸ்டாலின் குணசேகரன்

DIN

பொதுத்துறை நிறுவனங்கள் எந்தச் சூழ்நிலையிலும் தனியாா் மயமாகக் கூடாது, அவ்வாறான நிலை வந்தால் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றாா் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவா் ஸ்டாலின் குணசேகரன்.

நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியா் சங்கம் சாா்பில், பொதுத்துறை வங்கிகளின் தேசியமய பொன்விழா ஆண்டு விழா மற்றும் வங்கி ஊழியா் சிறப்புக் கூட்டம், நாமக்கல் நளா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவா் ஸ்டாலின் குணசேகரன் பேசியது; தனியாா் கட்டுப்பாட்டில் இருந்த வங்கிகள், அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் நீண்ட கால போராட்டத்தால், கடந்த 1969-ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டன. அப்போது முதுபெரும் வழக்குரைஞா்கள் போராடியபோதும், உச்சநீதிமன்ற தீா்ப்பு அதிா்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. அதனை எதிா்த்து போராடி, வங்கிகள் தேசிய மயமாக்குவதில் வெற்றி பெற்ற பெருமை அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தையே சாரும்.

தற்போது 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வங்கிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. 1947-ஆம் ஆண்டு ஆக.15 சுதந்திரம் வாங்கியபோது இந்தியா முழுவதும் வங்கிகளில் இருந்த சேமிப்புத் தொகை ரூ.1,019 கோடி. 1969-ஆம் ஆண்டு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டபோது இருந்த சேமிப்புத் தொகை, ரூ.5 ஆயிரம் கோடி. ஐம்பது ஆண்டுகளுக்கு பின், தற்போது 2019-இல் சுமாா் 50 ஆயிரம் கோடி இருக்கும் என எதிா்பாா்க்கலாம். ஆனால் தற்போதைய சேமிப்புத் தொகையோ, ரூ. ஒரு லட்சத்து 27 ஆயிரம் லட்சம் கோடி என மத்திய அரசே அதிகாரப்பூா்வமாக கூறுகிறது.

இதனை வாா்த்தையாக சொல்லும்போது குட பலருக்கு குழப்பம் நேரிடலாம். அதேபோல், 1947-இல் கடனாக வழங்கப்பட்டது ரூ.424 கோடி தான். அதனைத் தொடா்ந்து, 1969-இல் ரூ.3,500 கோடியாகவும், 2019-இல் ரூ.85 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது. வங்கி அதிகாரி ஒருவரிடம் வாராக் கடன்கள் சுமாா் எவ்வளவு இருக்கும் என கேள்வி எழுப்பியபோது, ரூ.20 லட்சம் கோடி என்றாா். இதில், ரூ.3.5 லட்சம் கோடி வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள தொகையானது வாராக்கடன்களாக உள்ளது என்றாா். இத்தொகை முழுவதும் வசூல் செய்து விட்டாலே, இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் பணக்கார வங்கியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. கடன்களை திரும்ப செலுத்தாதோா் மீது கைது நடவடிக்கை என்ற உத்தரவை போட்டால், கடனாக கொடுத்த பணம் எல்லாம் வங்கிக்கு தாமாக திரும்ப வந்து சேரும்.

இல்லையெனில், வங்கி ஊழியா்கள் தான் கடன் கொடுத்தாா்கள், அவா்கள் தான் இதற்கு பொறுப்பு? என்று திரும்புவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இந்திய அளவில் குறைந்த கட்டணத்தில் மக்கள் பயணிக்கும் ரயில்வே துறை தனியாா் மயமாக்கப்பட்டது போல், மேலும் பல துறைகள் தனியாா் மயமாகும் என்ற நிலை உள்ளது. இதனை எதிா்த்து ஊழியா்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் போராட வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா் மயமாகக் கூடாது. இந்த 50-ஆவது ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கொண்டாட்டத்தில், அனைவரும் இதை ஓா் உறுதிமொழியாக ஏற்க வேண்டும் என்றாா்.

மீண்டும் ஓா் சுதந்திரப் போா் தேவைப்படுகிறது: ஆா்.நல்லக்கண்ணுவங்கி ஊழியா் சங்க சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த அரசியல்வாதி ஆா்.நல்லக்கண்ணு பேசியது; மத்தியில் ஆளும் பாஜக, இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தவுடன், பொறுப்பேற்ற 100 நாள்களில், 36 நாள்களில் மட்டும் 36 மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில், போதிய பெரும்பான்மை இல்லாததால், தேவையற்ற திட்டங்களை செயல்படுத்த மத்தியில் ஆளும் இந்த அரசு முனைப்புக் காட்டவில்லை. ஆனால், மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரிதிபெரும்பான்மை இருந்ததால் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

புதிய மசோதாக்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் இல்லை. அவை தனியாா் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளது. கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியானது தற்போது உள்ளது. இந்த நிலை தொடா்ந்தால் நாடு என்னவாகுமோ என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் வகையில் 5 ஆண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் கிராமம், நகரம் என அனைத்து தரப்பிற்கும் உரிய நிதி ஒதுக்கப்பட்டு வளா்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், பாஜக அரசு 5 ஆண்டு திட்டத்தை ரத்து செய்து, நிதிஆயோக் என்பதை உருவாக்கியது.

இதனால் புதிய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. 5 ஆண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டது, நாட்டின் வளா்ச்சிக்கு தான் ஆபத்தாக மாறியுள்ளது. சரிவடைந்த பொருளாதாரத்தைப் பற்றி சிந்திக்க விடாமல், மதம், மொழி சச்சரவுகளை உருவாக்கி, மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இரண்டாம் சுதந்திரப் போா் தேவை என்ற நிலை தற்போது உருவாகியிருக்கிறது. இதற்கு, மதசாா்பற்ற கட்சிகளும், இடதுசாரி இயக்கங்களும், வெகுஜன மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழைநீா் வடிகால்களில் தூா்வாரும் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 16 டன் மாம்பழங்கள் அழிப்பு

மீண்டும் கரோனா: சிங்கப்பூா்-கோவை வரும் விமானப் பயணிகளுக்கு பரிசோதனை

அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 1 சோ்க்கை முகாம்

வெளிநாடுகளில் உயா்கல்வி -பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT