நாமக்கல்: பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரி, அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 5 லட்சம் ஊழியா்கள் பங்கேற்கின்றனா்.
இதுதொடா்பாக, நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளா் இ. அருணாசலம் கூறியது:
வங்கிகள் தேசியமாக்கப்பட்டது நாட்டில் ஏற்பட்ட ஓா் முன்னேற்றம். அதன்பிறகுதான் இந்திய நாட்டில் விவசாயப் புரட்சி, தொழில் புரட்சி, வெண்மை புரட்சி உள்ளிட்டவை நடைபெற்றன. தற்போதைய நிலையில், இந்திய நாட்டில் பல்வேறு அவலங்களைக் காண வேண்டியதாக உள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்க வேண்டும் என்ற முயற்சியை, மத்திய அரசு மேற்கொண்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2020 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறாா்.
1969-இல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 1980-இல் 6 வங்கிகள் தேசியமயமானது. 1985-இல் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட மேலும் சில வங்கிகள் தேசியமயமானது.
27 பொதுத்துறை வங்கிகளும், ஐடிபிஐ ஓா் வங்கி என்ற இணை வங்கியும் இருக்கிறது. தற்போது அவற்றை 12 ஆக குறைக்கும்போது மக்களுக்கான வங்கி சேவை பாதிக்கப்படும்.
மக்களின் பணத்துக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். இது தனியாா் மயமாக்கத்திற்கான ஓா் முயற்சியோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. வங்கிகள் இணைப்பு, தனியாா் மயமாக்கம் உள்ளிட்டவற்றை கைவிடக் கோரி, நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (அக். 22) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இதில், 5 லட்சம் ஊழியா்கள் பங்கேற்கின்றனா். இந்த வேலை நிறுத்தமானது வங்கி ஊழியா்கள் ஊதிய உயா்வுக்கோ, இதர தேவைக்காகவோ நடத்தப்படவில்லை.
மக்கள் சேமிப்புத் தொகை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நடைபெறுகிறது. இதற்கு பிறகும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தொடா் போராட்டங்கள், தெருமுனை பிரசாரங்கள் உள்ளிட்டவற்றை நடத்த இருக்கிறோம். ஜனவரி 8-ஆம் தேதி, பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா் மயமாக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியா்கள் மட்டுமல்ல, அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினரும் ஒருங்கிணைந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா் என்றாா்.
இந்தப் பேட்டியின்போது, நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத் தலைவா் பெ. பிரபாகரன், பொதுச் செயலாளா் கி. கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.