நாமக்கல்

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் வாரந்தோறும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பணிகள்: ஆணையர் தகவல்

DIN


 ராசிபுரம் நகராட்சிப் பகுதியில்  உள்ள 27 வார்டுகளில் வாரந்தோறும் இரு நாள்களுக்கு ஒருங்கிணைந்த சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படும் என  ஆணையர் மா.கணேசன் தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் 11-ஆவது வார்டு பகுதிகளான வி.நகர்,  வெங்கிடசாமி தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 136 துப்புரவுப் பணியாளர்களை கொண்டு கூட்டு தூய்மைப் பணி சனிக்கிழமை நடந்தது.  இதில் தெருக்களில் உள்ள சாக்கடைகள் தூர்வாரப்பட்டன. மேலும், வீடுகள் தோறும் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் குறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தி, நீர்த் தொட்டிகளில் அபேட்  மருந்தை ஊற்றினர். மேலும், நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியதுடன், அப்பகுதியில் இருந்த முட்புதர்கள் அகற்றினர். இப் பணிகளை பார்வையிட்ட  நகராட்சி ஆணையர் மா.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 
நகராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு, வீடுகள் தோறும் மக்கும்  குப்பை, மக்கா குப்பைகள் என தரம் பிரித்து பெறப்படுகின்றன. மேலும் நெகிழி ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. வணிக நிறுவனங்களிலும் நெகிழிப் பயன்பாடு தடை செய்யப்பட்டு அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கையாக நகரில் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் துப்புரவுப் பணியாளர்கள் வார்டுகள் தோறும் சென்று வாரம் இருமுறை சாக்கடை கால்வாய் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொசு உற்பத்தியைத் தடுக்க வீடுகளின் முன்பாக நீர் தேங்காத வண்ணம் சுகாதாரமான வகையில் பாதுகாப்பாக வைத்திருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் நீர்த்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து தெளிக்கப்பட்டு, தெருக்களில் கொசு விரட்டும் புகை மருந்து அடிக்கப்படுகிறது.
புதை சாக்கடைத் திட்டம் நிறைவு:  ராசிபுரம் நகரில் நடைபெற்ற வந்த புதை சாக்கடைத் திட்டப் பணிகள் பெரும்பாலும் முடிவுறும் நிலையில் உள்ளன.  தற்போது வீடுகள் தோறும் புதை சாக்கடைத் திட்டத்தின்கீழ் இணைப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை சுமார் 300 -க்கும் மேற்பட்ட வீடுகளில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நகர பொதுமக்கள் படிப்படியாக இந்தத் திட்டத்தின்கீழ் புதை சாக்கடைத் திட்ட இணைப்புகள் பெறவேண்டும். இதனால் சாக்கடைகளில் நீர்த்தேங்குவது தடுக்கப்பட்டு, நோய்கள் பரவுவது தடுக்கப்படும். புதை சாக்கடைத் திட்டத்தின்கீழ் இணைப்புக்கு முன்வைப்பு தொகையான ரூ.5 ஆயிரம் வீட்டு வரியுடன் சேர்த்து 5 முதல் 10 தவணைகளில் செலுத்தலாம். மேலும் பொதுமக்கள் இந்த இணைப்பில் சேர்ந்து பயன்படுத்திக்கொண்டு நகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.  
இப் பணியின் போது, நகராட்சி உதவிப் பொறியாளர் பரமசிவம், துப்புரவு அலுவலர் பாலகுமாரராஜூ,  துப்புரவு ஆய்வாளர்கள் லோகநாதன், பாஸ்கரன், மேற்பார்வையாளர் முத்தழகன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்கேதாட்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை: காவிரி ஆணையத்தில் தமிழகம் எதிர்ப்பு

பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

SCROLL FOR NEXT