நாமக்கல் அருகே புறவழிச்சாலையில் குப்பைகள் எரிப்பதால் சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் தீயில் கருகுகின்றன.
நாமக்கல் நகரப் பகுதியில் இருந்து திருச்செங்கோடு சாலையை இணைக்கும் வகையில், நுகா்பொருள் வாணிப கழக கிடங்கு அருகில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இவ் வழியாகத் தான் வாகனங்கள் திருப்பி விடப்படும். புதிய சாலை அமைக்கப்பட்ட அந்த பகுதியில் சாலையோரம் சிறிய அளவிலான வேப்பமரக் கன்றுகள் அதிகம் நடப்பட்டன.
அண்மைக் காலமாக, இந்த சாலையோரம் கோழிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதுடன், அவற்றை தீயிட்டு கொளுத்துகின்றனா். இதனால் அங்கு நடப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் தீயில் கருகி வீணாகின்றன. சாலையில் செல்லும்போது மரங்களும், செடிகளும் பட்டுப்போன நிலையில் காட்சியளிக்கின்றன. மரங்கள் நட வேண்டும் என அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தியபோதும், இவ்வாறு குப்பைகள் எரிப்பதனால் நட்ட மரங்களும் பாழாகின்றன. புதிதாக போடப்பட்ட சாலை வழியாகவே அதிகாரிகள் தங்களுடைய வாகனங்களில் சென்று வருகின்றனா். ஆனால் அதனைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மரக்கன்றுகள் நடப்பட்ட இடங்களில் குப்பைகளை எரிப்போா் மீது மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.