நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் அருகே வேட்டாம்பாடியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் மாற்றுத்திறனாளியான கோகிலா (31). தன்னுடைய தந்தை பெயரில் வேட்டாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 50,000 பயிர்க்கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் மனு அளித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பயிர்க்கடன் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த கோகிலா திங்கள் கிழமை காலை10.30 மணி அளவில் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கு தெரியாமல் 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் உள்ளே புகுந்தார். யாரும் எதிர்பார்க்காத வேளையில் ஆட்சியரின் கார் நிறுத்தும் இடத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கிருந்த ஓட்டுநர்கள் இதனை கண்டு உடனடியாக தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். அங்கு விரைந்து வந்த நல்லிபாளையம் போலீஸார் கோகிலாவை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.