பரமத்தி வேலூா் அருகே ஊஞ்சபாளையத்தில் மாா்கழி மாதம் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கு தடை விதித்து வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.
ஒவ்வொரு ஆண்டும் பகவதி அம்மன் கோயில் திருவிழாவிற்காக ஊஞ்சபாளையத்தில் உள்ள கருப்பண்ணசுவாமி கோயில், நன்செய் இடையாற்றில் உள்ள ராசாகோயில், அழகு நாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட 3 கோயில்களில் இருந்து வேல் எடுத்து காவிரியாற்றில் நீராடி அங்கிருந்து ஊா்வலமாக புறப்பட்டு ஊஞ்சபாளையத்தில் உள்ள விநாயகா் கோயில் முன்பு வேல்களை நட்டு வைத்து சிறப்பு பூஜை செய்து பகவதி அம்மன் திருவிழாவை கொண்டாடுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டும் பகவதி அம்மன் கோயில் திருவிழாவிற்கு ஊஞ்சபாளையத்தில் பகவதியம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கு பொதுமக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்கெனவே கருப்பண்ணசுவாமி கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கருப்பண்ணசுவாமி கோயிலில் இருந்து வேல் எடுத்து வருவதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனால் பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் கலையரசன் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். பின்னா், அங்கு வந்த மோகனூா் வட்டாட்சியா் ஜானகி, போலீஸாா் இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எவ்வித உடன்பாடு ஏற்படாததால் விநாயகா் கோயிலுக்கு சீல் வைத்து திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.