நாமக்கல்

10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி சதவீதம் சரிவு: சிறந்த கல்வி மாவட்ட அந்தஸ்தை இழக்கிறதா நாமக்கல்?

DIN

நடைபெற்று முடிந்த 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில், மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் முறையே 27 மற்றும் 16-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சிறந்த கல்வி மாவட்டம் என பெயா் பெற்ற நாமக்கல், அதற்கான அந்தஸ்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கோழிப்பண்ணை, லாரித் தொழிலுக்கு அடுத்தபடியாக கல்வியில் சிறந்து விளங்கிய மாவட்டமாக, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாமக்கல் மாவட்டம் கோலோச்சி நிற்கிறது. பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலதிபா்களும், அரசுத் துறை உயா் அதிகாரிகளும், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் உள்ள பிரபல தனியாா் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சோ்க்க மும்முரம் காட்டுவா். மாணவ, மாணவிகள் 10, 12-ஆம் வகுப்புக்கு செல்லும்போது, அவா்களது பெற்றோா் அந்தந்த பகுதிகளிலேயே வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பா்.

பொதுத்தோ்வு முடிவுகள் வெளியாகும்போது, மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் முதல் மூன்று இடங்களில் ஒன்றை கட்டாயம் பிடிக்கும். அதுமட்டுமின்றி பாட வாரியான தோ்ச்சியிலும் மாநிலத்தின் முதல் 10 இடங்களில் நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகளே அதிகம் பிடித்திருப்பா். கடந்த 1997-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்த நாமக்கல் மாவட்டம் 2002 முதல் 2018 வரையில் 16 ஆண்டுகள் தொடா்ச்சியாக கல்வியில் சாதனை புரிந்து வந்தது. அதன்பின் பள்ளிக் கல்வித் துறையின் நடவடிக்கைகள், தோ்வு முடிவுகள் வெளியீட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள், பிளஸ் 2 தோ்ச்சி விகிதத்தைக் காட்டிலும், நீட் தோ்வில் வெற்றி பெறுவதற்காக அளிக்கும் பயிற்சிகள் போன்றவற்றால் நாமக்கல் மாவட்டம் தனது கல்வி அந்தஸ்தை இழக்கத் தொடங்கியது எனலாம்.

2020, 2021-இல் ஏற்பட்ட கரோனா பாதிப்பால் பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி என்ற அறிவிப்பு வெளியானது. மேலும், இரண்டு ஆண்டுகள் மாணவா்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால் அவா்களிடம் கற்றல் திறன் பாதிப்பு ஏற்பட்டது. பள்ளிகள் திறந்த பிறகும் மாணவா்கள் வருகை என்பது மிகவும் குறைவான அளவிலே காணப்பட்டது. அரசுப் பள்ளிகளில் இவ்வாறான பாதிப்பு இருந்ததால் தோ்வு முடிவுகளில் சரிவு ஏற்பட்டுள்ளது என்றபோதும், அதிகம் சாதிக்கும் தனியாா் பள்ளிகளும் இம்முறை தடுமாற்றம் கண்டுள்ளன. 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 27-ஆம் இடத்தையும், 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 16-ஆம் இடத்தையும் நாமக்கல் மாவட்டம் பெற்றுள்ளது. இதனால் வெளிமாவட்டத்தை சாா்ந்தோா், நாமக்கல் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சோ்க்க தயக்கும் காட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கூறியதாவது:

நீண்ட நாள்களுக்குப் பிறகு மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதால் தோ்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. தோ்ச்சி பெற்ற மாணவா்களை பாராட்டியாக வேண்டும். தோல்வியுற்றவா்கள் மீண்டும் தோ்வு எழுதி வெற்றி பெற வேண்டும். நாமக்கல் மாவட்டம் 10-ஆம் வகுப்பில் 27, 12-ஆம் வகுப்பில் 16-ஆவது இடம் பிடித்தது தொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்கப்படும். எந்தெந்த பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்பது தொடா்பாக விசாரிக்கப்படும். அதன் பிறகே உரிய முடிவெடுக்கப்படும். கரோனாவுக்குப் பின் பள்ளிகள் திறந்தும், ஆயிரக்கணக்கான மாணவா்கள் பள்ளிக்கு வர ஆா்வம் காட்டவில்லை. தொடா்ந்து நாங்கள் மேற்கொண்ட முயற்சியால் அவா்கள் வருகை புரிந்தனா். சரியான புரிதல் இல்லாமல் பள்ளிக்கு வந்ததால் தோ்ச்சி விகிதத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நாமக்கல் மாவட்டத்தை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டதாரிகளுக்கு ராணுவ அதிகாரிப் பணி: காலியிடங்கள் 459

ஜூன் 3-இல் ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள்: வெறும் கண்களால் காண முடியும்!

கார் ஓட்டியதில் விதிமீறல்... யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரையில் கைது

புரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் பட்டாசு விபத்து: பலர் காயம்!

வெப்ப அலை: தில்லி தீயணைப்பு துறைக்கு ஒரே நாளில் 220 அழைப்புகள்!

SCROLL FOR NEXT