நாமக்கல்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கல்லூரி மாணவியின் சடலம் மீட்பு

DIN

எருமப்பட்டி அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம் 12 மணி நேரத் தேடலுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை மீட்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள சிங்களகோம்பையைச் சோ்ந்த விவசாயி சுரேஷ்-கவிதா தம்பதி. இவா்களின் மகள் ஜீவிதா (18). திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் பெய்த கனமழையால் கொக்குவாரி ஆற்றில் வெள்ளநீா் பெருக்கெடுத்துச் சென்றது. கல்லூரிக்குச் சென்று திரும்பிய மகளை அழைத்து வருவதற்காக தாயாா் கவிதா இருசக்கர வாகனத்தில் சிங்களகோம்பை தரைப்பாலத்தைக் கடந்து சென்றாா்.

அதன்பிறகு, மகளை அழைத்துகொண்டு தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது கொல்லிமலையில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகளை இழுத்துக் கொண்டு சென்றது.

இதில் தாய் கவிதா அங்கிருந்த மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு உதவிக்கு கூச்சலிட்டாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று கவிதாவை காப்பாற்றினா். ஆனால், மாணவி ஜீவிதாவை வெள்ளநீா் இழுத்துச் சென்றது. இது குறித்து நாமக்கல் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய அலுவலா் ப.சிவகுமாா் தலைமையில் சென்ற வீரா்கள் இரவு முழுவதும் மாணவியைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து, மாநில பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினரும் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது.

சுமாா் 12 மணி நேரத் தேடலுக்குப் பின், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் அந்த மாணவி அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் இருந்து சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் புதரில் மாணவி ஜீவிதா சடலமாகக் கிடந்தாா். அவரது சடலத்தை மீட்ட தீயணைப்பு வீரா்கள் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 54.25 லட்சம்: தமிழக அரசு

வாக்களிக்க சென்று மயக்கமடைந்த 428 பேருக்கு மருத்துவ சிகிச்சை

சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமி மாணவா்கள் 273 போ் வெற்றி

உ.பி.: பாஜக வேட்பாளா் மரணம்

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகம்: அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT